×

ஜீரோ கார்பன் முயற்சியின் ஒரு பகுதியாக அரசு கட்டிடங்களில் ரூ.120 கோடியில் சோலார் பேனல்களை அமைக்க முடிவு: தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை தகவல்

சென்னை:  ஜீரோ கார்பன் முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் உள்ள அரசு கட்டிடங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு தொழில்துறை நிறுவனங்களில் ரூ.120 கோடி செலவில் 20 மெகாவாட் திறன் கொண்ட ரூப் டாப் சோலார் பேனல்கள் நிறுவப்பட உள்ளதாக தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அதிகாரிகள் கூறியதாவது:  அரசு கட்டிடங்களை சூரிய சக்தியில் இயங்க வைப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வருவாய் துறை கட்டிடங்கள் உள்பட பல இடங்களில் சோலார் பேனல்கள் அமைக்க விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு ரூ.120 கோடி செலவாகும். ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தகுதியுடைவர்கள் பிப்.15ம் தேதி வரை டெண்டருக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், ஏலத்தில் தேர்வு செய்யப்படும் நிறுவனங்கள் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதோடு ஐந்தாண்டுகளுக்கு பராமரிக்கவும் வேண்டும். ஏலம் எடுக்கும் நடைமுறைகள் முடிந்து பின் விரைவில் பணி தொடங்கப்படும்.

தமிழகம் முழுவதும் பயன்பாட்டு பிரிவில்  5,400 மெகாவாட் மற்றும் நுகர்வோர் பிரிவில் 3,600 மெகாவாட் என 9,000 மெகவாட் சோலார் பேனல்களை நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள், மண்டலப் போக்குவரத்துக் கட்டிடங்கள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகள் உள்ளிட்ட அரசுக் கட்டிடங்களில் 1,916 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களை நிறுவுவதற்கு தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை தற்போது பணிகளை மேற்கொண்டு வருகிறது.

நிதி பற்றாக்குறை காரணமாக சில பகுதிகளில் சூரிய மின்சக்தி திட்டங்கள் தாமதமாகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள், 9,000 மெகாவாட் என்ற இலக்கை எட்ட வேண்டும், ஆனால், பல திட்டங்கள் இன்னும் தொடங்கப்படாமல் இருப்பதால் இலக்கை எட்ட முடியாத சூழலும் உள்ளது. இது குறித்து தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை சார்பில் அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Tamil Nadu Energy Development Agency , As part of zero carbon initiative, decision to install Rs 120 crore solar panels on government buildings: Tamil Nadu Energy Development Agency Information
× RELATED சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற...